Sunday, April 8, 2012
ஆசியுரை
ஓம்
சதா ஆதார சரஸ்வதி அருள் நிறைக.
உபன்னியாசமணி,முத்தமிழரசு,சிவயோகச்செல்வன், த.சாம்பசிவம்
(மட்டக்களப்பு காயத்ரி கலாசாரபீட சிவாச்சாரியார்)
புதுக்குடியிருப்பெனும் புண்ணியபூமிக்
கதுப்புகள் தாமாகப் பால் கசிவது போல்
சதாசிவம் மைந்தன் மதனுயிரோவிய
சதாகதிதானிந்த கவிதைச்சரம்
விதவிதமான இளசுகள் வாழ் உலகில்
புதல்வன் மதன் புதுக்கவி பரவியுளான்
புதையொடு புதைதல் புதைந்துள்ள ஓவியம்
இதையில் பூத்துள்ள இதயத்துடிப்பேதான்
அப்பாவின் உணர்வுத் தெப்பத்திலேறி மதன்
அன்னைக் குவமை இல்லையென இடித்துரைத்து
தப்பாது பட்டிப்பூத் திறனைக் கூறியவன்
சின்ன ஒருவனாய் கனவில் நனவானான்
சின்ன வயதில் தூக்கி உச்சி மோந்தவனின்
உன்னத படைப்பால் உவகைமிகவானேன்
இன்னுமின்னும் உயிரோவியத்தையருந்த
முன்நின்றருள் செய்வாய் மூத்த பிள்ளாய் நீ
சதா என்னன்பில் சிக்குண்ட மதனே
நிதானமாய் நிலவுலகில் நற்கவிதை
விதானமாய் நீ தந்து புகழ்விளங்க
ஆதார சரஸ்வதி அருள் நிறைக.
அன்புறு சிந்தையன்
சிவயோகச்செல்வன் த.சாம்பசிவம்
உங்களுடன் ஒரு நிமிடம்...
என்னால் நம்பவே முடியவில்லை. என் எழுத்துக்களுக்காய் நீங்கள் நேரம் ஒதுக்கியிருப்பதையும் உங்களின் நேரத்தில் நான் புகுந்துகொண்டதையும்.
இதனால் எனது நீண்டகாலக் கனவோ அல்லது இலட்சியமோ நிறைவேறியதாய் மகிழ்ச்சியில்லை. ஏனென்றால் மழையில் முளைத்த காளாhன் போன்றதொரு சம்பவமே இது. என்றாலும் ஆனந்தத்தின் எல்லையை அடைந்துவிட்டதாய் ஒரு உணர்வு.
நிச்சயமாக இத்துலங்கலுக்கும் நிறையவே தூன்டல்களும் இருக்கின்றன. அவற்iயும் சொல்லியே ஆகவேண்டும்.
முக்கியமாக 'செங்கதிர்' சஞ்சிகை. அது எனது முதல் கவிதையை தனது இளங்கதிரால் தாங்கிவந்தது. அதன் ஆசிரியருக்கே எனது முதல் நன்றி.
ஆனால் என்னை மீண்டும் ஒரு கவிதை எழுத வைத்தது, இல்லை, மீண்டும் மீண்டும் கவிதைகளை எழுத வைத்தது, எனது கவிதைக்குக் கிடைத்த முகமறியா இரசிகையிடமிருந்து வந்த முதல் பாராட்டு மடல். இவரை ஒரு இரசிகை என்பதை விட அப்போதிருந்த ஒரேயொரு இரசிகை என்றும் கூறலாம். இதைவிட முக்கியமாக என்முதல் கவிதைக்கு காரணமாகிய எனது நண்பன் எனக்குத் தனது படிக்குமறையில் பரிசளித்த தனிமையைக்கூடக் கூறலாம்.
அதன் பின் என் கிறுக்கல்களைச் சலிக்காமல் இரசித்த அனைத்து நண்பர்களும் எனக்கு தூண்டல்காக இருந்து ஊக்கமளித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.
என் கவிதைகளைப் பற்றியும் ஒன்று கூறவேண்டும் பொதுவாக நான் எழுதியிருக்கும் கவிதைகளனைத்தும் முற்றுமுழுதாக இலக்கியத்திற்காக மட்டுமே எழுதப்பட்டவை. அவை ஒரு செய்தியையோ அல்லது அறிவுரையையோ கூறவில்லை என்பதைக் கவனத்தில் கொள்க
என்னைப்பொறுத்தவரை ' கலை கலைக்காகவே ''
இரசித்துவிட்டு மறந்துவிடுங்கள் ஏனென்றால் நீங்கள் இரசிக்கவேண்டியவை இன்னும் நிறையவே இருக்கின்றன.
20-04-2010 இப்படிக்கு
ச.மதன்
அணிந்துரை
இன்றுவரை அணிந்துரை எழுதிய பிற தொகுதிகளை விட, இத்தொகுதிக்கு அணிந்துரை எழுதமுற்படுகின்ற போது வித்தியாசமானதொரு மனத்திருப்தி எனக்குள் பிறப்பெடுக்கின்றது. புதியதொரு பிரதேசத்திலிருந்து புதியதொரு கவிஞன் முதன்முதலாகப் பிறக்கிறான் என்பதனாலேற்படும் திருப்தியே அது.
மேலும் தெளிவாகக் கூறுவதாயின் மட்டக்களப்புப் பிரதேச நவீன இலக்கிய வளர்ச்சி பற்றி உன்னிப்பாக அவதானிக்கின்றபோது மண்டூர், ஆரையம்பதி, ஏறாவூர் ஓட்டமாவடி, காத்தான்குடி என்றவாறு ஊர்சார்ந்த இலக்கிய வளர்ச்சியொன்று உருவாகி வந்திருப்பதைக் கண்டுகொள்ளமுடியும். அவ்வழி, இத்தொகுதியூடாக மட்டக்களப்பு நவீன கவிதை வளர்ச்சி ஓட்டத்துடன் புதுக்குடியிருப்பு என்ற புதியதொரு பிரதேசம் சங்கமமாகின்றமை முக்கிய கவனிப்புக்குள்ளாகின்றது.
ஏலவே, வானொலி முதலானவற்றினூடாக தேவராசா முதலான இரண்டொரு புதுக்குடியிருப்புக் கவிஞர்களின் குரல்கள் ஓரளவு ஒலித்திருப்பினும் தொகுதி வடிவில் வருகின்ற முதற் தொகுப்பு இதுவென்பதில் தவறில்லை! இலக்கியச் சஞ்சிகை என்றவிதத்தில் அண்மைக்காலமாக வெளிவந்துகொண்டிருக்கும் 'கதிரவன்' அத்தகைய முதற் சிறப்பை ஏலவே பெற்றிருப்பதை மறுப்பதற்கில்லை.
புதிய ஊர்.. புதிய கவிஞன்... என்ற நிலையில் இத்தொகுப்பில் புதிய கவிதைகளைக் காண்கின்றோமா எனில் அவ்வாறன்று. பாசம், இயற்கை,காதல்,நட்பு முதலான பழைய விடயங்களையே கூடுதலாகப் பாடியுள்ளார் கவிஞர். ஆயினும் அவற்றினூடே ஓரளவு புதிய புதிய வெளிப்பாட்டு முறைகளைக் காணமுடிவது முதற்கண் பாராட்டப்படவேண்டிய விடயமாகின்றது.
உதாரணம் :-
மார்கழி யுத்தம்
'மார்கழி யுத்தம்
மெல்லமெல்ல மூழ்கிறது
கோடையெல்லாம்
கோர்த்தெடுத்த மழைத்துளியால்
பாணம் தொடுத்தது வானம்
அதை
பொய்கையாய்
வெற்றி கொண்டது பூமி
.....................'
அன்னை
அன்னைக்கோர் உவமை
அகிலமெல்லாம் தேடுகிறேன்
ஐயோ, பாவம்!
உவமைகள்
கொடுத்துவைக்கவில்லை!
காத்திருப்பு
'ஈர நிலா அறியும்
இருட்டாத சூரியன்
இரண்டுமே சேர்ந்தறியும்
உனக்காய் நான் காத்திருக்கும்
அந்த
இரவுப் பகல்களை
.....................'
பொது என்ற பிரிவினுள் தலைப்பிற்கேற்ப பல்வேறு விடயங்கள் அடங்கியிருப்பது வௌ;வேறு சுவையுணர்வு கிட்ட வழிகோலுகின்றது!
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடினார் வள்ளலார். வள்ளலார் வழியில் சென்று, பலரதும் கண்ணில் படாத, பலரும் வெறுக்கின்ற 'பட்டிப்பூ' நிலைகண்டு கவிஞர் பரிதாபப்படுவது அவ்விதத்தில் முதற்கவனத்தை ஈர்க்கிறது. இத்தொகுதியிலுள்ள கவிதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகவும் அது காணப்படுகின்றது. விரிவஞ்சி அதனை மறுபடி இங்கு எடுத்தாள்வதைத் தவிர்த்துள்ளேன். வாசகர்கள் அதனைத் தேடிச்சுவைப்பார்களாக!
கடந்த பல வருடங்களாக - ஏன் இன்றும்கூட - பல பிரதேசங்களில் காணப்படுகின்ற, தமிழ்மக்களது அவலநிலை புதியதொரு சித்திரமாக, இன்னொரு கவிதையில் உருவாகின்றது. அதன் ஆரம்பம் பின்வருமாறமைகின்றது.
உயிர்க்கொடி
' அனல் பூவில் தேன்துளியாய்'
மெழுகொப்ப பல மக்கள்!
கனல் மண்ணில் சிறுபுழுவாய்
துடிதுடிக்கும் ஒரு தேசம்! '
விழிப்புலனிழந்தவர்களின் குமுறல் மற்ரொரு கவிதையில் மனதைப் பிழியும் வண்ணம் வெளிப்படும் அதேவேளை எமது சிந்தனையையும் தூண்டுகின்றது| பின்வரும் பகுதியை அதற்கு உதாரணமாக்கலாம்:
'ஒளி என்ற ஒன்றே
எங்கள் விழிசெல்ல
வழியின்றி விழிக்கிறது -இது
ஒளியின் இயலாமையாய்
இருக்கவும் முடியுமன்றோ?
இருந்தும்
உங்களின் வகையீட்டில்
நாங்கள்தான் அங்கவீனர்...'
ஆக, இவ்வாறெல்லாம் நோக்குகின்றபோது இத்தொகுதி நம்பிக்கையளிக்கும் நட்சத்திரமொன்றின் முதற் கண்சிமிட்டலை வெளிப்படுத்துகின்றதென்பதில் தவறில்லை.
சிறுகதை,நாவல் முதலியன போன்றே இக்காலக் கவிதையும் உலகப் பொதுவான இலக்கியவடிவங்களுளொன்று. ஆதலின், ஈழத்தின் பிற பிரதேசங்களின் - தமிழ்நாட்டின் -உலகின் ஆரோக்கியமான கவிதைப் போக்குகளை உள்வாங்க வேண்டியது இன்றைய யுகத்துக் கவிஞர்களுக்கு – அவர்களுள் ஒருவரான இவருக்கும் - அவசியம் வேண்டப்படுவதொன்று! ஆதலின், இந்த புதிய நட்சத்திரம் தொடர்ந்து பயணிக்கவேண்டிய ஒளியாண்டுகள் நீண்டதாகவுள்ளன என்பதனை நட்பார்ந்த ரீதியில் சுட்டிக்காட்டுவது என் கடமையாகின்றது!
வாழ்த்துக்களுடன்
கலாநிதி.செ.யோகராசா
கிழக்குப் பல்கலைக்கழகம்
2010.07.02
சின்னச்சின்ன ஆசை
நான்முகன் நாயகி - என்
நாவில் வந்துநின்றாடிட
ஓராயிரம் வரங்கள் வேண்டும்
தொல் காப்பியம் தந்தவன்
என் வாக்கியம் தன்னில்
தவண்டு விளையாடவேண்டும்
பாரத நாட்டிடை பாவலன்
பாரதி வீரம்என் பேனாமுனை
காட்டியே தமிழ் நீட்டிட
வழு ஓட்டியே போகவேண்டும்
கம்பனின் வம்புகள்
வாங்கியே வந்து நான்
காவியம் பாடவேண்டும்
கவி ஆயுதம் கொண்டுநான்
பாயிரம் ஆயிரம் பாடியே
பாவல னாகவேண்டும்
வண்ணத்தமிழே இனி
தனி ஒரு மொழியாய்
வையகம் ஆழவேண்டும்.
புதியதோர் உலகம் செய்வோம்
புதியதோர் உலகம் செய்வோம் -அதில்
புதுமையே பூக்கச் செய்வோம்
மகிழுடை மாந்தர் செய்வோம் -நல்ல
மனமுடை தேகம் செய்வோம்
நனி எழில் நகரம் செய்வோம் - அதை
நானிலம் போற்றச் செய்வோம்
நொடியறப் பிறக்கச் செய்வோம் - மீறிப்
பிறந்திடில் சிறக்கச் செய்வோம்
இரவாத மனிதம் செய்வோம் - சற்றும்
குறையாத குணங்கள் செய்வோம்
அமைதியே நிலைக்கச் செய்வோம் - அதனால்
அகிலமே அதிரச் செய்வோம்
இரையாத கடல்நடுவே -என்றும்
இன்னிசை பிறக்கச் செய்வோம்.
வேண்டுகிறேன்.....
தாயின் கருவறையில்
மீண்டும் ஒருமுறைநான்
அறியும் அறிவுடனே
அடைபட வேண்டுகிறேன்
சிசுவின் உயிர்த்துடிப்பை
உணர்வால் உணர்வதற்கு
தாயே உனைப்போலும்
நான் மாற வேண்டுகிறேன்
சத்தமில்லா நித்திலத்தில்
நித்தமும் சுற்றிவர
இறைவா உனை நானும்
தாள்பணிந்து வேண்டுகிறேன்
சொர்க்கம் ஒன்றிருந்தால்
சற்றே சென்றுவர
சாகும் வரை வேண்டுகின்றேன்
கட்புலனற்றவரின்
கனவற்ற உலகமதை
ஒருமுறை நான்காண
பலமுறை வேண்டுகின்றேன்
ஏழைகள் யாருமில்லா
ஏழேழுலகங்களை
சிருஷ்டிக்கும் சக்தி பெற
வரமொன்றை வேண்டுகிறேன்
இளைஞரே வாரீர்
உலகம் நம் கையில் காட்டலாம் வாரீர்
அன்பும் பண்புமதைக் கூட்டலாம் வாரீர்
ஊனமாய் நம்; சமூகம் உறங்கிக் கிடப்பதனை
பாணமாய் மாற்றி நாம் படையெடுப்போம் வாரீர்
வானம் தூரமில்லை தாண்டலாம் வாரீர்
மண்ணும் தாழ்வில்லை வாழலாம் வாரீர்
கல்வி அற்றவனை கல்வி கற்றவர் நாம்
எள்ளிநகை யாடாமல்
'கல்' என்று கல்வி புகட்டுவோம் வாரீர்
இழிவென்று ஒரு தொழில்
இனி இங்கு இல்லையென
இடியெனவே கூறிடுவோம்
இன்றே நீ எழுந்து வாரீர்
மனித ஜாதிதனை புனித மாக்கிடவே
சாதிமத பேதமின்றி
சரித்திரம் படைக்க வாரீர்!
ஊமை உலகம்
ஊமை உலகம் - இது
உண்மைகளின் கல்லறை
நன்மைகள் செல்லரித்த
செல்லாக் காசுகள்
அன்பின் அரசாட்சியில்
உயிரற்ற உறைவிடம்
மாளிகைத் தோட்டம் - அதில்
காகிதப் பூக்கள்
பூத்துக் குலுங்கும்
கலப்படப் பொக்கிஷம்
பால்வீதி பவனி வரும்
கானல் ஓடம்
ஆன்மீகம் அழிந்த
அரக்கு மாளிகை
இதுவே எங்கள்
உண்மை உலகம்
விஞ்ஞானம்
எட்டாத வானை
தொட்டுப்பார்க்க
துரத்திச் செல்லும் - எமக்கு
வடிவமற்ற உருவைக் கூட
வரைந்துகாட்டும்
'வா' என்றால்
'போ' என்று பொருளென்று
பொருத்தமாய் சொல்லும்
வந்த பிணி போவதற்கு
வழியும் சொல்லும்.
மெஞ்ஞானம் என்று
மெய்யுரைத்தால்
சீச்சீ..... பொய்வாதம்
போய் வா என்று சொல்லும்
மெய்தான் என்று
மெய்யாய்த் தெரிந்த பின்னும்
பொருத்திப் பார்த்து
போருக்கழைத்து - பின்
திருட்டுத்தனமாய்
தின்றுபார்க்கும்- அந்த
விஞ்ஞானம்.
பிரபலங்களின் தோட்டம்
பார்த்துப் பார்த்து
பக்குவமாய் ஒரு பயிர்வளர்த்தேன்
விளைச்சலும் கண்டது அமோகமாய்
விற்பனையோ
போகவில்லை சுமூகமாய்
இலட்சமாய் பிரிந்து - பின்
சுக்குநூறானேன் ஒவ்வொன்றாய்
என்ன அதிசயம்!
பிரபலங்களின் தோட்டத்தில்
பிஞ்சாய்ப் பிறந்தாலும்
பதராய்ப்போனாலும்
கேட்கிறார்கள்
'நன்றாயிருக்கிறது
நாலைந்து தாருங்கள்'
பின்புதான் புரிந்தது
தெரிவு செய்ய தேர்ச்சி பெறா
மக்கள் விரும்புவது
விளைச்சலையல்ல
விவசாயிதான் என்று.
வாழ்க்கை
கனவுகளும் அல்ல
கற்பனையுமல்ல
காலங்களில் மட்டும் நினைவுகள் பேச
நீள நதிக்கரையில நீண்ட நெடுமூச்சு
நிஜத்தின் முடிவுகளா? - இல்லை
நிழலின் தொடக்கங்களா?
பசுமை நினைவுகளில் பாதி
பழைய பாதைகளில் பாதி
பயங்கள் கூட பயப்படும் சிலவேளை
வளர்கின்றோம் என தேய்கின்றோம்.
படைப்புகள் பணயமாய்
பார்வையில் பனிமூட்டமுடன்
பாலையில் மலர்ந்த - எங்கள்
சோலையின் சோகங்கள்.
தெருவோர ராஜாக்கள்
தெருவோர ராஜாக்கள்
இராணிகளும் கூட
தெளிவான வாழ்வில்லை
எனநினைக்கத் தோன்றும்
தெளிவாக நோக்கயிலே
தெளிவென்று தெளிந்திடலாம்
கோடியாய் உழைப்பவனும் -தெரு
கேடியாய் உழல்பவனும்
வாழ்க்கை பாதைதனில்
வழுக்காமல் செல்கின்றார்
உறங்க வீடில்லை
உண்ண உணவுமில்லை
இவையெல்லாம் இல்லையென்று
இம்மியும் கவலையில்லை
ஐயம் அகற்றி விட்டேன்
ஐயா! உமைக்கண்டு
வாழ்வு சாவெல்லாம்
வல்லவன்; வகுத்த வழி
தவறும் தண்டனையும்
தவறுகளெல்லாம் தவறுகளல்ல
தண்டனை கூட எல்லாம் தவறுகளே
இயற்கைக்கு மனிதன் தவறிழைத்தால்
அனர்த்தமும் இங்கு தண்டனையே
அனர்த்தமாய் இயற்கை தவறிழைத்தால்
அழிவுகள் அதற்குத் தண்டனையே
இன்றைய தவறின்
தண்டனைகள்
நாளைய
தண்டனைக்குரிய தவறுகளே!
தண்டனையற்ற வழியே
தவறுகளற்ற உலகம்.
உண்மையின் தேடல்
ஆயிரம் விடைகளுடன்
வினாக்களைத் தேடுகிறேன்
தேடியும் கிடைக்கவில்லை
கிடைத்தவை திருப்தியில்லை
திருத்தங்கள் செய்தபின்பும்
திகைப்பதற்கு ஏதுமில்லை
ஏற்கவும் விருப்பமில்லை
ஏமாற முடியவில்லை
கடவுளைத் தேடுவதில்
தோற்பதனால் வெல்லுகிறேன்.
ஜேசு
மாந்தருள் மாணிக்கம் - அவன்
மரியாள் பெற்ற
மாதவச் செல்வன்
மாசுகள் ஓட்டிட
ஜேசுவாய் வந்த
தேசப் பிதாமகன் - அவன்
நேசப் பெருந்தலைவன்
ஆடுகள் மேய்த்து - உறு
கேடுகள் ஓட்டிய
கோ எங்கள்
ஜேசுபிரான் -நல்
நேயங்கள் நோக்கும் - உள்
நோ முற்றும் போக்கும்
தாய் எங்கள்
ஜேசு பிரான்.
புன்னகை
புன்னகைக்கும் மறுகணமே
புதையல்கள்
செல்லுபடியற்றதாகும்
மொழிபெயர்க்கத் தேவையில்லை
மோதல்கள் முடிந்தபின்பும்
முகவரி தெரிவதில்லை
தேடல்கள் தேய்ந்த பின்னும்
தெவிட்டாத ஒரு மொழிதான்
புரியாத பாஷையிலும்
புன்னகைதான் பொதுச் சொற்கள்
புன்னகை விழிம்பினிலும்
புயல்களே புதைந்துவிடும்
பாவம் பைத்தியங்கள்
கேட்கின்றன....
புன்னகை என்ன விலை?
உயிர்க்கொடி
அனல் பூவில் தேன் துளியாய்
மெழுகொப்ப பல மக்கள்
கனல் மண்ணில் சிறுபுழுவாய்
துடிதுடிக்கும் ஒரு தேசம்
பிறையெனவே மறைகிறது
மறை தந்த மனிதம்
அதிலே
கண்ணீரால் கடல் செய்து
உதிரத்தால் ஓடம் விட்டு
உயிரின் அந்தத்தில்
ஊஞ்சலாடும் ஓர் உயிர்
தன் சொந்தத்திற்காய்
தூரத்தில் ஒரு சொந்தம்...
கண்கண்ட விம்பம்
கபாலம் அடையமுன்பே
அறுந்தது
அவன் உயிர்க் கொடி மட்டுமல்ல
காலனின் கல் மனதுந்தான்.
உயிரைத் தேடி...
பெயர் மட்டும் உண்டு
'உயிர்' என்று
அழைக்கத்தான் ஆளில்லை
யாரென்றும் தெரியவில்லை
யாருக்கும் புரிவதில்லை
உயிர்...
மரணத்தின் எதிரியா?
இரண்டும் ஒன்றாய்
பயணிப்பதேயில்லை
மரணம்....
உயிருக்கு மதிப்பளிக்கிறதோ?
உயிரின் விளிம்பில் கூட
மரணம் வருவதில்லை
திண்மத் திரவியமோ? - உயிர்
திரவமோ? தீக்கொழுந்தோ?
காற்றின்றிப் போனாலும்
மரணம் மரிப்பதில்லை
உயிரைத்தேடித்தேடி
மரணத்தைக் கண்டபின்னும்
வரமொன்று கேட்டு
உயிரைத்தான் தேடுகிறேன்.
உழைக்கும் உதிரம்
உழைப்பதற்கே
உதிரும் அந்த உதிரம்
பாடலைத் தாங்கிவரும்
காற்றலைபோல
வரிகள் மட்டும் நேசிக்கப்படுகின்றன
காற்றலைகள் தூஷிக்கப்படுகின்றன
காற்றலைகள்
இரசிக்கப்படா விட்டாலும் - அவை
நசுக்கப் படாமலிருக்கட்டும்
தேநீர் நிறமுணர்த்தும்
அவர் சோகங்களை
அது கூட கரையும் வரை
கறுப்பாலே
மறைக்கப்பட்டேயிருக்கிறது
அவர்தம் சோகங்கள்
ஊமையின் கனவுகளல்ல
ஓரப் பனிமலைகள் - உருகினால்
உலகமே உதிர்ந்து விடும்
இவை சோகங்களை
உணர்த்துவதற்காக அல்ல
தேவைகளை உணர்வதற்றாக
தனித்தனி வலுக்களை
புணர்த்துவோம் புதுமைசெய்ய
கோடிஸ்வரன்
ஆயிரம் இரவல்களின்
சொந்தக்காரன் நான்
ஓர் இரவேனும்
முற்றுப்பெறாமல்
விழித்திருக்க
யாசகம் கோரும்
உபாசகன் நான்
விடிந்தால்
விடைகேட்கும் - என்
நிம்மதி
இருந்தாலும்
நானும் - ஒரு
முக்கிய புள்ளிதான்
ஊரவர்க்கு
என்னை சந்திப்பதே
அவர்களின்
முதல் வேலை
பாவம்
'விரைவில் தருகிறேன்'
என்ற
ஒரே விடைக்காய்
ஒவ்வொருநாளும்
காத்திருப்பார்கள்
பெயரைத்தவிர
அனைத்திலும்
ஏழை நான்.
அவளுக்கு...
பெண் என்ற இலக்கணத்தின்
இரண்டாம் பாகம் நீ
பெண் என்றால்
இப்படியிருக்கக் கூடாதென்ற
உதாரணத்திற்கே உரியவள் நீ
பாவம் பாரதி
உனைப்பார்த்துச் சொல்கிறான்
புதுமைப்பெண்ணாம்
உண்மைதான்
புதுமையான பெண்தான் நீ
புதினமாய் ஆகிவிட்டாய்
உண்டி சுருங்குதல்
பெண்டிர்க் கழகாம்
அன்று தெரியவில்லை ஒளவைக்கு
பிழையாய் பொருள்கொண்டு நீ
உடையைச் சுருக்குவாய் என்று
பெண்மையெனும் கோட்டில்
இறுதியின் முடிவிலி நீ
முயற்சித்துப்பார்!
முன்னேற இடமுண்டு
இறுதியின் முடிவிலாவது.
எங்களுக்கும் பெயரிடுங்கள்
எங்களையும் பெயரிடுங்கள்
நாங்களும் மனிதர்கள் தான்
புதிதாய் ஒரு வகையீடு
எங்களுக்கு எதற்காக?
கந்துடைந்த மரமென்றால்
வேறுகாடு தேடுவதோ?
விழுது விழுந்துவிட்டால் - ஆலை
அரசு ஆகிடுமா?
எங்களுக்கு மட்டும் ஏனோ
ஊனரென்றீர்
அடுத்தடுத்து
அங்கவீனரென்றீர்
இப்போது வேறாய்
மாற்றுத் திறனுடைய
மனிதர்கள் நீங்களென்றீர்
நாளை ஞாலமிடும்
நாமமென்ன நாமறியோம்
எங்களுக்கும் பெயரிடுங்கள்
நாங்களும் மனிதர்கள்தான்
கண்ணென்ற உருவம்
கலைந்துமே போகவில்லை
அன்பாய்ப் பார்க்கவும்
எங்களுக்கும் முடிகிறது
ஒளி என்ற ஒன்றே
எங்கள் விழிசெல்ல
வழியின்றி விழிக்கிறது-இது
ஒளியின் இயலாமையாய்
இருக்கவும் முடியுமன்றோ?
இருந்தும்...
உங்களின் வகையீட்டில்
நாங்கள்தான் அங்கவீனர்
எங்களுக்கும் பெயரிடுங்கள்
நாங்களும் மனிதர்கள்தான்
பட்டிப்பூ
தூய்மையானவள் நீ -ஏன்
துயருடன் வாழ்கிறாய்?
எங்கள் துயரையும் துடைக்கலாமே
சுமையாக நோய் வந்தால்
சுகமாக்க உன் வேர்கள்
புற்றொன்று வந்தாலும்
சட்டென்று போக்கிடுவாய்
சுவாலை முடிவினிலும் -உன்
சுகந்தமே தெரியவில்லை
சுமையென்பர் வீட்டில்
சுடலையின் சொத்தாக
பலகாலம் காட்டில்
தேடல்களின் தேக்கம் நீ
தொலைவுகளின் தொலைவும் நீ
காட்டிவிடு - உன்
சுவட்டின் புதையல்களை
மறக்க முடியவில்லை
வயல்களின் வசந்தமும்
மரநிழல் மாருதமும்
மறக்க முடியவில்லை
கடலோடு கதைபேசும்
கரையோர மணற்கோட்டை
கட்டிய காலங்களும்
மறக்கமுடியவில்லை
மணல்வீட்டு மாளிகையில்
சிரட்டைக் கறிச்சட்டி,
படிப்பறியாக் காலங்களில்
படிதாண்டும் பரீட்சைகள்,
தவணை விடுமுறையில்
தலைதெறிக்க விளையாட்டு,
விடுமுறை விடைகேட்கும்
விரைவாக எனத்தோன்றும்
பள்ளிக் காலங்களும்
மறக்கமுடியவில்லை
நித்திரையில் கீறும்
தமிழ்ச் சித்திரங்களும்
மறக்கமுடியவில்லை
இவையென்றும்
மறக்க முடிவதில்லை
பாதரட்சை
செருப்பாய்க் கிடப்பேன் - உன்
காலடியில்
சிதைந்தே இருப்பேன் - நீ
இல்லையெனில்
மறக்கமுடியவில்லை
கடலோரம் நாம் கால்கோர்த்து
நடந்த அந்த நாட்களையும்
என் கால்தடம் கூட
நீ மறைப்பாய் - எனை
காட்டிக் கொடுக்காமல்
உன்னையும் நான்
மறந்ததில்லை- என்றும்
என்னுடன் நீமட்டும்
என் தனிமையில் கூட
கண்ணையே இழந்தாலும்
உன்னை நான் கண்டுகொள்வேன்
கோயில் வாசலிலே - என்னை
விட்டு நீ சென்றதேனோ?
தொலைந்த அந்த நாட்கள்
பட்டி தொட்டியெங்கும்
பாட்டி கதைகேட்க
வட்ட நிலா முற்றமெலாம்
சுற்றிவந்த
முன்னோர் காலமது
கற்றவரும் உற்றவரும்
மற்றவரும் கூடி நிதம்
வெட்ட வெளி தேடி அதில்
வட்டமிட்ட காலமது
நட்ட பயிர் பட்டவுடன்
தொட்டணைத்து முத்தமிட்ட
கட்டழிந்து போன எங்கள்
கட்டழகுக் காலமது
நட்டநடு நிசியில்
பட்டப் பகலெனவே
சுற்றிவந்த எங்கள்
தொடராய்த் தொலைகின்ற
தொலைவான காலமது.
தூக்கம்
பிறப்பதற்காக
இறக்கிறேன்
ஒவ்வொரு நாள்
காலையிலும் - ஒரு
புதிய மனிதனாய்
அப்போது மட்டும் தான்
மரிப்பதற்கு
மகிழ்ச்சியாகத் தயாராகிறேன்
கடைசிமட்டும்
பிறக்கும் போது கூட
இறந்தது நினைவில்லை
நான் சந்தித்ததில்
நித்திரையும் - ஒரு
மாவீரன்தான்
எனை மாய்க்கும் போது
முயற்சிக்கிறேன்
முடியவில்லை
ஒவ்வொரு முறையும் - நான்
வெல்வதற்கு
மார்கழி யுத்தம்
மார்கழி யுத்தம்
மெல்ல மெல்ல மூழ்கிறது
கோடையெல்லாம்
கோர்த்தெடுத்த மழைத்துளியால்
பாணம் தொடுத்தது வானம்
அதை
பொய்கையாய்
வெற்றிகொண்டது பூமி
அண்டமெல்லாம்
ஒன்று கூடி
புயலாய் மாறி
புரட்டப்பார்த்தது பூமியை
மின்னல் கொடிகட்டி
மிரட்டியும் பார்த்தது
மிடுக்காய் எழுந்த பூமி
பயிருக்கு உயிராக்கியது
மின்னலை
முழக்கமாய் முரசு கொட்டி
மீண்டும் எதிர்த்தது வானம்
ஆதவன் பூமியை
கதிர்களால் கட்டியணைத்து
வெப்பத்தால் முத்தமிட
பின்வாங்கியது கார்மேகம்
சூரியக் கதிர்களை
நன்றிக் கரம் கொண்டு
நீட்டியசைத்தது நெற்கதிர்
மார்கழி யுத்தம்
மெல்லமெல்ல முடிந்தது
வானம் பூமிக்கு
வெற்றி கொடுத்தது
விளைச்சலாய்
நிலவுதாசன்
அன்புள்ள நிலவுக்கு
அடிமை எழுதுவது
உனைப்பாடா கவிஞனென்று
ஒருகணம் நான்
அகந்தைகொண்டேன்.
நிமிடமொன்றில்
நிறுத்திவிட்டாய் - உன்
காலடியில் - பின்
அடிமையாக்கியெனை
சிறைபிடித்தாய் உனதழகால்
இப்போது நான்
முப்பதுநாளும்
முழுநிலவு கேட்கும்
முழுநேரப் பிச்சைக்காரனானேன்.
தரமறுத்தால் - உன்
உயிரறுப்பேன்
இல்லாவிட்டால் - நானே
உயிர்துறப்பேன்.
இப்படிக்கு
உனதடிமை.
அஸ்தமனம்
கார்மேகம்
உன்னில் தன்னை
தங்கமுலாம் இட்டுக்கொள்ளும்
பார்ப்போரின் மெய்யை
மெய்யாய்
உந்தன் ஒயில்
வெட்டிக் கொல்லும்
அந்தி வானை முந்தி வந்து
மஞ்சள் உன்னை
ஏந்திக் கொள்ளும்
விஞ்சும் உந்தன்
தங்க நிறம்
அந்த வானை
வாங்கிக் கொள்ளும்
அணையும் சுடரென்றா
அழகால் ஆளுகின்றாய்
முற்றுப்புள்ளி முடிவல்ல
அஸ்தமனம் கூட
அதிகாலை கண்விழிக்கும்!
உன்னில் தன்னை
தங்கமுலாம் இட்டுக்கொள்ளும்
பார்ப்போரின் மெய்யை
மெய்யாய்
உந்தன் ஒயில்
வெட்டிக் கொல்லும்
அந்தி வானை முந்தி வந்து
மஞ்சள் உன்னை
ஏந்திக் கொள்ளும்
விஞ்சும் உந்தன்
தங்க நிறம்
அந்த வானை
வாங்கிக் கொள்ளும்
அணையும் சுடரென்றா
அழகால் ஆளுகின்றாய்
முற்றுப்புள்ளி முடிவல்ல
அஸ்தமனம் கூட
அதிகாலை கண்விழிக்கும்!
நம்பமுடியவில்லை!
அழிவு தந்த ஆழியா - இப்படி
அமைதியாய் இருப்பது?
ஆர்ப்பரித்த கடலா -இப்படி
அடங்கிக் கிடப்பது?
நம்ப முடியவில்லை – என்னால்
நம்பவே முடியவில்லை!
ஆயிரமாயிரம் உயிர்களுக்கு
உறைவிடமளித்த கடலா!
கோடி உயிர்களைக்
கொள்ளையடித்தது ? - இதையும்
நம்பவே முடியவில்லை?
இமய மலையிலும்
பெரிய மலைகளும்
கற்பகத்தருவாய்ப்
பற்பல மரங்களும்
கானகம் போலொரு
காட்சிகளும் உன்னுள்
காணக்கிடைக்குமாமே! - இதெல்லாம்
நம்பவே முடியவில்லை!
அறிவாளிகள் அதிகம்
பேசாமல் இருப்பராமே – ஆனால்
எத்தனை அதிசயம் உன்னுள்
மொத்தமாய் வைத்தும்
இத்தனை காலமாய்
அலைமொழி கொண்டு
கரையுடன் உனக்கு – அப்படி
என்னதான் பேச்சு?
சிற்பமாய் எத்தனை
சிலை வடித்தாய் -முருகை
கற் பாறைதனில்
மொத்தமாய் எப்படி
உயிர்கொடுத்தாய்
உயிரியின் ஆரம்பமாய் - பின்
அரவணைத்தாய் - நல்
வரங்கொடுத்தாய் - மீனவரை
வாழவைத்தாய் -இறுதியில்
சாவடித்தாய் - உனை
நம்பவே முடியவில்லை!
உயிருள்ளவரை...
பள்ளிகள் வீடாகின..
வீடுகள் சேறாகின..
வீதிகள் விலாசம் மறந்தன..
நாடுகள் காடாகின..
காடுகள்
பசுமை ஆடை களைந்து
நிர்வாணமாகின..
சிரிப்புகள் கூட விம்மியழுதன..
மரங்கள் இலையை
கண்ணீராய்ச் சொரிந்தன..
கட்டிடங்கள் கற்களாயின..
மயானங்கள் மைதானமாயின..
நீ வந்து போனவேளை
அன்னையாய் உனை நினைத்தோம்
அசுரன் என்று காட்டி விட்டாய்
தந்தையாய் உனை நினைத்தோம் - எல்லாம்
தலைகீழாய் மாற்றிவிட்டய்.
ஆளில்லை உனக்கின்று பிணை நிற்க
ஆளெல்லாம் ஆகிவிட்டார் பிணமாக
அலையலையாய் நீ வந்து
தலைதலையாய் கொண்டு போனாய்
சோலை வனமெல்லம்
பாலைவனம் ஆகியது
நீ வந்துபோனவேளை
பூமித்தாய் என்ன செய்தாள்
நீயிங்கு பொங்கி வர
சொல்லாமல் வந்து பெரியவனாகிவிட்டாய்
உப்பிட்டுப் போன உன்னை
உயிருள்ள வரை மறக்கமாட்டோம்.
கட்டித் தழுவிய நீ
கடித்துக் குதறினாய்..
ஏதோ
'சுனாமி'யாம் என்று
தென்றலும் நானும்
சந்திக்க வேண்டும்- என்
சிந்தனை தூண்டும் - உன்
சின்ன விரல்களை
இன்று போல் என்றும் - நான்
சந்திக்க வேண்டும்
உன்னை நான்
வெறுப்பதுண்டு
நித்தமும் நீ
சத்தமின்றி - அவளை
முத்தமிடும் போது மட்டும்
தென்றலே....
நீ
வந்து போகையில்
வெந்துபோகிறேன் நான்
என்னவளின் மென்மனதை
வென்று போவதால்
உனைப் பார்த்து நான்
அறிவு கொண்டேன்
ஆபத்தின்
ஆரம்பங்கள் எல்லாம்
அமைதிதான் என்று.
கண்காட்சி
ஓவியனைக் காணவில்லை
தூரிகையும் தெரியவில்லை
என்னே அழகு!
எங்கே வர்ணம் பெற்றான்?
இத்தனை ஜாலங்கள்
எங்கிருந்து கற்றிருப்பான்?
கண்களை ஏமாற்றும்
கலைகளும் கற்றவனோ?
ஓவியக் கண்காட்சி
அமைதியாய் நடக்கிறது
விளம்பரங்கள் ஏதுமில்லை
விளக்கங்களும் கொடுப்பதில்லை
மூலை முடுக்கெங்கும்
முக்கிய காட்சிகள்தான்
அனைத்தும் பிரமாண்டம்
காலையில் கிழக்கிலும்
மாலையில் மேற்கிலும்
பிரதான காட்சிகள்
காலாவதி தேதியில்லை
அனுமதியும் இலவசந்தான்
என்றாலும்,
அணுவணுவாய் ரசிப்பவர்கள்
ஆயிரத்தில் ஓரிருவர்
சிதறல்கள் ஏதுமில்லை
திருத்தங்கள் தேவையில்லை
அதோ தெரிகிறது!
இயற்கையின் கண்காட்சி.
நீயின்றி நாமில்லை
நகரம் தந்து
நகர்ந்து சென்றாய்
அப்போது புரியவில்லை
நீயற்ற இடம்
நிம்மதியற்ற
நரகம் என்று
நிஐமான நிழலுக்காய்
நெடுங்காலம் காத்திருப்போம்
நீயின்றி நாமில்லை
நாமில்லா நாள்கூட
நீ மட்டும் நிலைத்திருந்தாய்
நிலைத்தும் இருப்பாய்
எத்தனை சக்திகள்
உன்னுள் அடக்கம்
மழை கூட மண்டியிடும்
பூமி வந்து முத்தமிட
அனல் கூட ஆர்ப்பரிக்கும்
அமைதியாய் நீயிருந்தால்
வாயுவும் வலம்வருவான்
உனைத் தீண்டி உலகாள
பூமித்தாய் காத்திருப்பாள்
நீ
பொங்கி வந்து பூத்திருக்க
உன்னை நாமழித்தால்
வானக்குடையும்
வடிவிழந்து போய்விடுமே
ஓசோனை உடைத்துவிட்டு
எம் தாயை விட்டால்
வேறுகரு எமக்கேது?
தருவே உனக்கு
தெருவும் கருவாகும்!
உயிரோவியம்
சின்னச் சிரிப்பு
சிணுங்கிய உன் பேச்சு
சித்திரக் கண்கள்- அதில்
சிதைக்கும் உன் பார்வை
மொத்தமாய் எனை மூழ்கடிக்கும்
மொழுமொழென்ற உன் மேனி
இரத்தினப் பற்கள்- அதில்
எத்தனை சொற்கள்
எனை முறியடிக்க!
சித்திரமே - உனை
சிலைவடிக்க
எத்தனை நாளெடுத்தார்
தேவர் சத்திரமே கூடியொரு
இத்துணை சாதனை
தான் படைக்க.
எனக்காக ஒருமுறை
சிந்திய உன் சிரிப்பில் சிகரமே சிதையுமடி
சிக்கிய என்மனது சிலையாகப் போகுமடி.
உன் புன்னகை-எனை இழுக்கிறது
பல தடைகளைத் தாண்டி
புரியாத உன் மொழிகூட
புதுக்கவி புனைகிறது
உலகப்பொது மொழிதான்!
என்றாலும் புரியவில்லை.
என்ன உணர்வாயோ!
எப்படித் தவிப்பாயோ-என்னை உணர்வதற்கு
முகம் நனைத்த உன்முத்தம்
இன்னும் முடியவில்லை
மறக்கவும் நாதியில்லை
நிர்வாண உடையுடன் - நீ
நீட்டி உதைக்கையிலே
மீண்டும் யாசிக்கிறேன்
எனை மீண்டும் உதை மகளே!
அன்புள்ள அப்பா
உன்னாலே உயிரானேன்
உலகறியப் பயிரானேன்
ஊமையாய் உனதன்பை
உணராமல் போனேனோ?
களையாய் என் பிழைதீர
முளையாய் நீ வழியானாய்
கிளையாய் நான் புகழ்சூட
மழையாய் நீ கருவானாய்
எந்தையாய் உன்னை
எண்ணிய போதெல்லாம்
ஏமாந்து பேனேனோ?
எந்தையும் தாயுமாய்
என்றுமே நீயாகும்
விந்தையும் காணாமல்!
அடர்ந்த உனதன்பின்
ஆழம் அறியாமல்
உன் - என் இடைத் தூரத்தை
முடிவிலியில் தொலைத்தேனே(h)!
காதலி
உன்னைக்
காணாமலேயே இருந்திருக்கலாம்
காதலுக்கு கமா போட்டு
நீ
என் தேடல்களுக்கு
முற்றுப்புள்ளி
வைத்துவிட்டாயே!
என்னவளே!
உன் கன்னக்குழியில் நான்
கரைந்தே போனாலென்ன
நின் சின்னச் சிரிப்பில் யான்
சிதைந்தே போனாலென்ன
மீண்டுமொருமுறை
மீண்டு வந்து நான் - உன்னில்
தாண்டு போனாலென்ன
உயிரின்றி உறவாடுவேன் - உன்
ஓரக்கண்ணில் சிறை காண்கிறேன்
மறுஜென்மம் காணாமலே
உன்னில் உரமாகி
உயிர்வாழுவேன்.
காத்திருப்பு
ஈர நிலா அறியும்
இருட்டாத சூரியன்
இரண்டுமே சேர்ந்தறியும்
உனக்காய் நான் காத்திருக்கும்
அந்த
இரவுப் பகல்களை
உன் நினைவுச் சுமைகளால்
கூன் விழுந்த என் காதலுக்கு
உன் நினைவுகளே ஆதாரம்
அளிப்பதை நீ அறிவாயா?
காதல் அடர்த்தியை நான்
முழுதாய் அறிவதற்கா
மூடி வைத்துன்னை
முற்றாக நீ மறைத்தாய்
கனாக்களில் நாம்
சங்கமித்த
கானலின் காலங்களை
கண்ணீரிக் கரைப்பதற்கு
கண்ணீருக்காய் அழுகின்றேன்
முடிவிலி ஜென்மங்கள்
முற்றாய் முடிந்த பின்னும்
புதிதாய்ப் பிறப்பெடுப்பேன்
தினம் உனை நினைப்பதற்கு.
நீண்ட இரவுகள்
நீண்ட இரவுகள்
முடிய வைக்க முடியவில்லை
ஏனோ தெரியவில்லை
இரவுகளும் இனிக்கிறது
கடிகாரம் மயங்கியதோ? - ஏனோ
மணிமுள்ளும் நகரவில்லை
காதல் இதுதானோ? - இல்லை
காதலின் கட்டியமோ?
சுகங்களும் கூட இங்கு
இனந்தெரியா சுமையாகும்
சுற்றிய இருளெல்லாம்
எமக்காக ஒளிவீசும்
இருதயம் கூட இங்கு
இமயமாய்க் கனக்கிறது
என்னவென்று மட்டும்
இன்றுவரைப் புரியவில்லை
தனிமையின் தாகம்
தாங்க முடியவில்லை
தலைவா உனைப்பிரிய
தவிர்க்கவும் முடியவில்லை
யுத்தம் நீ புரிய
தோல்வியின் துயர்கூட - என்
என் தனிமை வென்றுவிடும்
வெற்றி வரும் வேளை
கண்ணீர் அதைக்கழுவும்
ஒளவைக்குத் தெரியவில்லை
தனிமை கொடியதென்று
அகமும் அறிவதில்லை
அஃதே உண்மையென்று
மன்னர் வரும் வரையும்
மலரே! மடி தருவாய்
ஏனின்றுன் இதழ்கூட
கருங்கல்லாயக் கனக்கிறது?
ஊடல் சுகம் கூட
உடனே தெரிவதில்லை
கூடல் வரும்வேளை
கூடவே கூடிவரும்
உன்னை நினைப்பதில்லை
ஏனென்றால்.....
காலிமைப் பொழுதிலும்
நானுன்னை மறப்பதில்லை.
நடை
அன்னத்திற்கு
முன்
நீ பிறந்திருந்தால்
அன்னத்தைப் பார்த்து
உன்னைப்போல் என்றிருப்பேன்
ஒரு சொட்டுத் தண்ணீரால்
சாகரத்தை
எப்படி நான்
உவமை செய்வேன்.
காத்திருக்கும் காதலி
தற்செயலாய்
உனைக் கடந்தேன்
கற்சிலையாய்
எனையாக்கினாய் நீ
உச்சியிலே யிருந்து
என் இச்சைகளை
முடமாக்கினாய்
நீ...
வன்மையினால்
எனைநிரப்பி - உன்
புன்னகையால் எனை
பொதிசெய்கிறாய்
காத்திருப்பேன்
காதலனே - எனை
உன் காதலியாய்
விலை செய்வாயென.
உனைக் கடந்தேன்
கற்சிலையாய்
எனையாக்கினாய் நீ
உச்சியிலே யிருந்து
என் இச்சைகளை
முடமாக்கினாய்
நீ...
வன்மையினால்
எனைநிரப்பி - உன்
புன்னகையால் எனை
பொதிசெய்கிறாய்
காத்திருப்பேன்
காதலனே - எனை
உன் காதலியாய்
விலை செய்வாயென.
தோழியாய் மட்டும்...
தோழியாய் நீ வேண்டும்.
தோள் சாயும் போதும்
தொடராமல் உன் காதல்
தொலைதூரம் போக வேண்டும்
வெற்றிக்குப் பின்னே
வெள்ளையாய் நீ வேண்டும்
விவசாயி நானென்றால்
விளைநிலமாய் ஆக வேண்டும்
உலகை நான் வெல்ல
உரமாக நீ வேண்டும்
ஊழல் ஏதுமில்லா
ஊடலும் நீ கொள்ள வேண்டும்
தூய அன்பு வேண்டும்
தொலையாத நட்பு வேண்டும்
என்றென்றும் உனைப்பிரியா
ஒய்யார உறவு வேண்டும்.
இப்படியும் உறவுகள்...
ரெத்த உறவெண்டா
ரெத்தினம் போலென்று
புத்தம் புது உறவா
எத்தன பேர் வாறாங்க!
அரசனாய் இருந்தவனும்
ஆண்டியாய் போகையில…
வயிற்றுப் பசி போக்க
வக்கற்று நானும்
வழியின்றி வழிவழியே
தெருநாயாத் திரிகையிலே…
தெரிகிறதே உங்க வேஷம் - அப்போ
புரியலையே நண்பன் பாசம்
உறவிலும் உசத்தியென்னு!
ரெத்தினம் போலென்று
புத்தம் புது உறவா
எத்தன பேர் வாறாங்க!
அரசனாய் இருந்தவனும்
ஆண்டியாய் போகையில…
வயிற்றுப் பசி போக்க
வக்கற்று நானும்
வழியின்றி வழிவழியே
தெருநாயாத் திரிகையிலே…
தெரிகிறதே உங்க வேஷம் - அப்போ
புரியலையே நண்பன் பாசம்
உறவிலும் உசத்தியென்னு!
சின்ன ஒருவன்
வேகமாய் புறப்பட்டன
வேரறுத்து மரங்கள்
மனித வேட்டைக்காய்
சிலந்தி வலைகட்டி
சின்ன மனிதனை
சிறைபிடிக்கப் பார்த்தன
சிட்டுக்குருவிகள்
பாவமாய்ப் பயந்த மனிதன்
பதுங்கினான் புல்மறைவில்
கட்டெறும்புகள் அவனை
காட்டெருமையாய் முறைத்தன
குட்டை மரங்களும்
நெடுந்தூரம் காட்டின
அங்குல நகர்வுக்கே
ஆண்டுகள் வேண்டிய அவன்
ஆபத்தைக் கண்டதும்
என்ன செய்வான்!
சின்ன ஒருவனாய்
சிலவேளை இருந்திருந்தால்
இன்னலுக்கு இளைப்பாற
என்னபாடு பட்டிருப்பான்!
கனவு நனவாகிறது...
அன்றொருநாள் காலை
அங்கதன் புறப்பட்டான்
"அம்மா போய் வாறேன்"
வீரமாய் ஒரு குரல்
'கவனமாய்ப் போய் வா"
கவலையுடன் பதில் குரல்
முகத்தில் ஏதோ தேடல்
அங்கதா!
எனைத் தீண்டாயோ?
செருப்பின் ஏக்கம்
மறுபுறம்
"அம்மா புத்தகம்"
பதிலுக்குப் பின்புதான்
அங்கதனுக்கு
நாளைகளின் அர்த்தம்
அஸ்;தமன மாகிறது.
படலை தாண்டியதும்
வீதியெல்லாம் இவனின்
விளையாட்டரங்கு
சோறு மட்டும் எட்டாக்கனி
சேறுகள்தான் - இவன்
செல்லத் தோழி
இதனால் அங்கே - தன்
நிரந்தர வாடிக்கையாளனுக்காய்
வழிபார்த்துக் காத்திருந்தது
தலைமை வாத்தியாரின்
கைப்பிரம்பு.
வழமைமுன் நிகழ்வை
வடிகட்டி நுழைந்தான்
வகுப்பறைக்குள்
"அங்கதா வாரும் - அடுத்த
வகுப்புத்தலைவன்
நீதானடா!"
அன்பான வார்த்தைகள்
அங்கதனை வரவேற்றன
நீண்டநாள் கனவு
நிஐமாய் நிறைவேறியதால்
பேரொலி பெருக்கினான்
பேரின்பமாய்
"என்னடா சத்தம்!
கனவேதும் கண்டாயா?"
அம்மாவின் அனுங்கலொலி
அங்கதனை அருட்டியது.
தண்ணீரை மென்று
மீண்டும் தலைசாய்ந்தான்
தலையணையில்
அங்கதன் புறப்பட்டான்
"அம்மா போய் வாறேன்"
வீரமாய் ஒரு குரல்
'கவனமாய்ப் போய் வா"
கவலையுடன் பதில் குரல்
முகத்தில் ஏதோ தேடல்
அங்கதா!
எனைத் தீண்டாயோ?
செருப்பின் ஏக்கம்
மறுபுறம்
"அம்மா புத்தகம்"
பதிலுக்குப் பின்புதான்
அங்கதனுக்கு
நாளைகளின் அர்த்தம்
அஸ்;தமன மாகிறது.
படலை தாண்டியதும்
வீதியெல்லாம் இவனின்
விளையாட்டரங்கு
சோறு மட்டும் எட்டாக்கனி
சேறுகள்தான் - இவன்
செல்லத் தோழி
இதனால் அங்கே - தன்
நிரந்தர வாடிக்கையாளனுக்காய்
வழிபார்த்துக் காத்திருந்தது
தலைமை வாத்தியாரின்
கைப்பிரம்பு.
வழமைமுன் நிகழ்வை
வடிகட்டி நுழைந்தான்
வகுப்பறைக்குள்
"அங்கதா வாரும் - அடுத்த
வகுப்புத்தலைவன்
நீதானடா!"
அன்பான வார்த்தைகள்
அங்கதனை வரவேற்றன
நீண்டநாள் கனவு
நிஐமாய் நிறைவேறியதால்
பேரொலி பெருக்கினான்
பேரின்பமாய்
"என்னடா சத்தம்!
கனவேதும் கண்டாயா?"
அம்மாவின் அனுங்கலொலி
அங்கதனை அருட்டியது.
தண்ணீரை மென்று
மீண்டும் தலைசாய்ந்தான்
தலையணையில்
நன்றிகள்
அப்பா மாணிக்கப்போடி சதாசிவம்
அம்மா பொன்னையா பார்வதி
சிவயோகச் செல்வன் த. சாம்பசிவம் ஐயா
கலாநிதி.செ.யோகராசா
திரு.வே.தட்சணாமூர்த்தி
திருமதி.ஜெகதீஸ்வரி நாதன்
திரு.க.தேவராசா
திருமதி.லோகேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி
“செங்கதிர்” சஞ்சிகை
“கதிரவன்” சஞ்சிகை
மற்றும் ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும்
முற்றாய் வாசித்த உங்களுக்கும்
என்னினிய நன்றிகள்
அம்மா பொன்னையா பார்வதி
சிவயோகச் செல்வன் த. சாம்பசிவம் ஐயா
கலாநிதி.செ.யோகராசா
திரு.வே.தட்சணாமூர்த்தி
திருமதி.ஜெகதீஸ்வரி நாதன்
திரு.க.தேவராசா
திருமதி.லோகேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி
“செங்கதிர்” சஞ்சிகை
“கதிரவன்” சஞ்சிகை
மற்றும் ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும்
முற்றாய் வாசித்த உங்களுக்கும்
என்னினிய நன்றிகள்
Subscribe to:
Posts (Atom)