இன்றுவரை அணிந்துரை எழுதிய பிற தொகுதிகளை விட, இத்தொகுதிக்கு அணிந்துரை எழுதமுற்படுகின்ற போது வித்தியாசமானதொரு மனத்திருப்தி எனக்குள் பிறப்பெடுக்கின்றது. புதியதொரு பிரதேசத்திலிருந்து புதியதொரு கவிஞன் முதன்முதலாகப் பிறக்கிறான் என்பதனாலேற்படும் திருப்தியே அது.
மேலும் தெளிவாகக் கூறுவதாயின் மட்டக்களப்புப் பிரதேச நவீன இலக்கிய வளர்ச்சி பற்றி உன்னிப்பாக அவதானிக்கின்றபோது மண்டூர், ஆரையம்பதி, ஏறாவூர் ஓட்டமாவடி, காத்தான்குடி என்றவாறு ஊர்சார்ந்த இலக்கிய வளர்ச்சியொன்று உருவாகி வந்திருப்பதைக் கண்டுகொள்ளமுடியும். அவ்வழி, இத்தொகுதியூடாக மட்டக்களப்பு நவீன கவிதை வளர்ச்சி ஓட்டத்துடன் புதுக்குடியிருப்பு என்ற புதியதொரு பிரதேசம் சங்கமமாகின்றமை முக்கிய கவனிப்புக்குள்ளாகின்றது.
ஏலவே, வானொலி முதலானவற்றினூடாக தேவராசா முதலான இரண்டொரு புதுக்குடியிருப்புக் கவிஞர்களின் குரல்கள் ஓரளவு ஒலித்திருப்பினும் தொகுதி வடிவில் வருகின்ற முதற் தொகுப்பு இதுவென்பதில் தவறில்லை! இலக்கியச் சஞ்சிகை என்றவிதத்தில் அண்மைக்காலமாக வெளிவந்துகொண்டிருக்கும் 'கதிரவன்' அத்தகைய முதற் சிறப்பை ஏலவே பெற்றிருப்பதை மறுப்பதற்கில்லை.
புதிய ஊர்.. புதிய கவிஞன்... என்ற நிலையில் இத்தொகுப்பில் புதிய கவிதைகளைக் காண்கின்றோமா எனில் அவ்வாறன்று. பாசம், இயற்கை,காதல்,நட்பு முதலான பழைய விடயங்களையே கூடுதலாகப் பாடியுள்ளார் கவிஞர். ஆயினும் அவற்றினூடே ஓரளவு புதிய புதிய வெளிப்பாட்டு முறைகளைக் காணமுடிவது முதற்கண் பாராட்டப்படவேண்டிய விடயமாகின்றது.
உதாரணம் :-
மார்கழி யுத்தம்
'மார்கழி யுத்தம்
மெல்லமெல்ல மூழ்கிறது
கோடையெல்லாம்
கோர்த்தெடுத்த மழைத்துளியால்
பாணம் தொடுத்தது வானம்
அதை
பொய்கையாய்
வெற்றி கொண்டது பூமி
.....................'
அன்னை
அன்னைக்கோர் உவமை
அகிலமெல்லாம் தேடுகிறேன்
ஐயோ, பாவம்!
உவமைகள்
கொடுத்துவைக்கவில்லை!
காத்திருப்பு
'ஈர நிலா அறியும்
இருட்டாத சூரியன்
இரண்டுமே சேர்ந்தறியும்
உனக்காய் நான் காத்திருக்கும்
அந்த
இரவுப் பகல்களை
.....................'
பொது என்ற பிரிவினுள் தலைப்பிற்கேற்ப பல்வேறு விடயங்கள் அடங்கியிருப்பது வௌ;வேறு சுவையுணர்வு கிட்ட வழிகோலுகின்றது!
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடினார் வள்ளலார். வள்ளலார் வழியில் சென்று, பலரதும் கண்ணில் படாத, பலரும் வெறுக்கின்ற 'பட்டிப்பூ' நிலைகண்டு கவிஞர் பரிதாபப்படுவது அவ்விதத்தில் முதற்கவனத்தை ஈர்க்கிறது. இத்தொகுதியிலுள்ள கவிதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகவும் அது காணப்படுகின்றது. விரிவஞ்சி அதனை மறுபடி இங்கு எடுத்தாள்வதைத் தவிர்த்துள்ளேன். வாசகர்கள் அதனைத் தேடிச்சுவைப்பார்களாக!
கடந்த பல வருடங்களாக - ஏன் இன்றும்கூட - பல பிரதேசங்களில் காணப்படுகின்ற, தமிழ்மக்களது அவலநிலை புதியதொரு சித்திரமாக, இன்னொரு கவிதையில் உருவாகின்றது. அதன் ஆரம்பம் பின்வருமாறமைகின்றது.
உயிர்க்கொடி
' அனல் பூவில் தேன்துளியாய்'
மெழுகொப்ப பல மக்கள்!
கனல் மண்ணில் சிறுபுழுவாய்
துடிதுடிக்கும் ஒரு தேசம்! '
விழிப்புலனிழந்தவர்களின் குமுறல் மற்ரொரு கவிதையில் மனதைப் பிழியும் வண்ணம் வெளிப்படும் அதேவேளை எமது சிந்தனையையும் தூண்டுகின்றது| பின்வரும் பகுதியை அதற்கு உதாரணமாக்கலாம்:
'ஒளி என்ற ஒன்றே
எங்கள் விழிசெல்ல
வழியின்றி விழிக்கிறது -இது
ஒளியின் இயலாமையாய்
இருக்கவும் முடியுமன்றோ?
இருந்தும்
உங்களின் வகையீட்டில்
நாங்கள்தான் அங்கவீனர்...'
ஆக, இவ்வாறெல்லாம் நோக்குகின்றபோது இத்தொகுதி நம்பிக்கையளிக்கும் நட்சத்திரமொன்றின் முதற் கண்சிமிட்டலை வெளிப்படுத்துகின்றதென்பதில் தவறில்லை.
சிறுகதை,நாவல் முதலியன போன்றே இக்காலக் கவிதையும் உலகப் பொதுவான இலக்கியவடிவங்களுளொன்று. ஆதலின், ஈழத்தின் பிற பிரதேசங்களின் - தமிழ்நாட்டின் -உலகின் ஆரோக்கியமான கவிதைப் போக்குகளை உள்வாங்க வேண்டியது இன்றைய யுகத்துக் கவிஞர்களுக்கு – அவர்களுள் ஒருவரான இவருக்கும் - அவசியம் வேண்டப்படுவதொன்று! ஆதலின், இந்த புதிய நட்சத்திரம் தொடர்ந்து பயணிக்கவேண்டிய ஒளியாண்டுகள் நீண்டதாகவுள்ளன என்பதனை நட்பார்ந்த ரீதியில் சுட்டிக்காட்டுவது என் கடமையாகின்றது!
வாழ்த்துக்களுடன்
கலாநிதி.செ.யோகராசா
கிழக்குப் பல்கலைக்கழகம்
2010.07.02
No comments:
Post a Comment