Sunday, April 8, 2012

மார்கழி யுத்தம்


மார்கழி யுத்தம்
மெல்ல மெல்ல மூழ்கிறது

கோடையெல்லாம்
கோர்த்தெடுத்த மழைத்துளியால்
பாணம் தொடுத்தது வானம்
அதை
பொய்கையாய்
வெற்றிகொண்டது பூமி

அண்டமெல்லாம்
ஒன்று கூடி
புயலாய் மாறி
புரட்டப்பார்த்தது பூமியை

மின்னல் கொடிகட்டி
மிரட்டியும் பார்த்தது
மிடுக்காய் எழுந்த பூமி
பயிருக்கு உயிராக்கியது
மின்னலை

முழக்கமாய் முரசு கொட்டி
மீண்டும் எதிர்த்தது வானம்

ஆதவன் பூமியை
கதிர்களால் கட்டியணைத்து
வெப்பத்தால் முத்தமிட
பின்வாங்கியது கார்மேகம்

சூரியக் கதிர்களை
நன்றிக் கரம் கொண்டு
நீட்டியசைத்தது நெற்கதிர்

மார்கழி யுத்தம்
மெல்லமெல்ல முடிந்தது
வானம் பூமிக்கு
வெற்றி கொடுத்தது
விளைச்சலாய்

No comments:

Post a Comment