எங்களையும் பெயரிடுங்கள்
நாங்களும் மனிதர்கள் தான்
புதிதாய் ஒரு வகையீடு
எங்களுக்கு எதற்காக?
கந்துடைந்த மரமென்றால்
வேறுகாடு தேடுவதோ?
விழுது விழுந்துவிட்டால் - ஆலை
அரசு ஆகிடுமா?
எங்களுக்கு மட்டும் ஏனோ
ஊனரென்றீர்
அடுத்தடுத்து
அங்கவீனரென்றீர்
இப்போது வேறாய்
மாற்றுத் திறனுடைய
மனிதர்கள் நீங்களென்றீர்
நாளை ஞாலமிடும்
நாமமென்ன நாமறியோம்
எங்களுக்கும் பெயரிடுங்கள்
நாங்களும் மனிதர்கள்தான்
கண்ணென்ற உருவம்
கலைந்துமே போகவில்லை
அன்பாய்ப் பார்க்கவும்
எங்களுக்கும் முடிகிறது
ஒளி என்ற ஒன்றே
எங்கள் விழிசெல்ல
வழியின்றி விழிக்கிறது-இது
ஒளியின் இயலாமையாய்
இருக்கவும் முடியுமன்றோ?
இருந்தும்...
உங்களின் வகையீட்டில்
நாங்கள்தான் அங்கவீனர்
எங்களுக்கும் பெயரிடுங்கள்
நாங்களும் மனிதர்கள்தான்
No comments:
Post a Comment